தமிழ்நாட்டிற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை – பொதுமக்களுக்கு அல்வா வழங்கி திமுகவினர் நூதன போராட்டம்…!

மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி,  சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை பெய்தது. …

மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி,  சென்னை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை பெய்தது.  அதைத் தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த மிகத் தீவிர மழை 4 மாவட்டங்களையும் புரட்டிப்போட்டுவிட்டது.  இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது.  இதனையடுத்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  மேலும் வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழுவும் சென்னை மற்றும் தூத்துக்குடி வந்தது.

இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்,  நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.  அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களைச் சரிசெய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு 37,000 கோடி ரூபாயைக் கோரியது.

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினர்.  இருந்த போதும் மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லையென திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில்,  மத்திய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திமுக சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,  சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் திமுகவினர் அல்வா வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.