முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக எம்.பி ஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நிலைக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவ மனைக்குச் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார். இந்நிலையில்,
தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த பரமேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பரமேஸ்வரி மறைவை அடுத்து, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் – தாழ்விலும், நெருக்கடிகளிலும் – சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் பரமேஸ்வரி. அவர் மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசா வின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரமேஸ்வரி யின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Advertisement:

Related posts

“கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Saravana

கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!

Niruban Chakkaaravarthi

அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

Nandhakumar