ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 14 அன்று ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “தாங்கள் ஜனாதிபதி அல்ல, தன்னை ஏதோ ஆளுநர் ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் போலும்தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் அவரது வேலையே தவிர, அப்படியே வைத்திருப்பது அவரது வேலை அல்ல” எனத் தெரிவித்துள்ளது.
சரியாகச் சொன்னால், அவருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் – அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர், யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப் படுகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. “இப்படி ஒரு சட்டமுன்வடிவு குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் கிடையாது. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் அதனை அனுப்புவேன்” என்று ஆளுநர் சொல்லி வருகிறார் என சுட்டிக்காட்டியுள்ளது. காலநிர்ணயம் வைக்கவில்லை என்றால், அவரே தனக்குத் தானே ஒரு காலநிர்ணயத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இத்தகைய சூழலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகமிகப் பொறுமையாகச் செயல்படுகிறார், ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமூகமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதல்வர். அத்தகைய உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. ஆனால் ஆளுநரின் போக்கு இதனை விரும்பாததாக அமைந்துள்ளது என்றும் முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







