இலங்கை பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கை தமிழர்களுடன் முதலமைச்சர் உரையாடினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால் அங்கு பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்துள்ளன. இதனிடையே பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற தமிழுணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைவோம் எனவும், தேவைகளைக் கேட்டறிந்து தீர்ப்போம், மனிதம்தான் நமது அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டார்.







