“பாஜகவை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது”

பாரதிய ஜனதா கட்சியை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில்…

பாரதிய ஜனதா கட்சியை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மலைவாழ் மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், பிரதமரின் வனபந்து யோஜனா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பு முதல் முனைவர் படிப்பு வரை மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், மலைவாழ் மக்களுக்கான கிராம ஊராட்சிகளில் 100% நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது எனக் கூறிய அவர், மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.26,135 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மலைவாழ் இளைஞர்கள் 100 பேர் கொண்ட குழுவாக வந்தால் அவர்களுக்கான காபி பயிர் விற்பனை இயக்கத்தை ஏற்காட்டில் ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தார்.

அண்மைச் செய்தி: “100% நகைக்கடன் தள்ளுபடி” – கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நெல் உள்ளிட்ட 14 விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், மேகதாது விவகாரத்தில் அணை கட்டப்பட கூடாது என்பதுதான் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது எனக் கூறினார். மேலும், மேகதாது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்பதாக ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேகதாது விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சட்டம் தெளிவாக உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாதுவைப் பொறுத்தவரையில் பாஜக தான் முதலில் கையில் எடுத்தது எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய அவர், மதுரை ஆதீனம் மீது அமைச்சர் சேகர்பாபு கங்கணம் கட்டிக் கொண்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், மதுரை ஆதீனத்தை பொறுத்தவரை அவர் எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசை விமர்சித்துப் பேசவில்லை எனத் தெரிவித்த அவர், மாநில அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் வரக்கூடாது என்று தான் மதுரை ஆதீனம் கூறினார். முதலமைச்சரையோ, அமைச்சரையோ அவர் விமர்சித்து பேசவில்லை. அவருடைய கருத்தைச் சொல்வதற்கு மதுரை ஆதீனத்திற்கு முழு உரிமை இருக்கிறது, எதுவும் சொல்லக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறுவதை ஏற்க முடியாது, அதேபோல அவர் மிரட்டியும் வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், புகார் சொன்னால் வழக்கு என்பது புதிது கிடையாது. மின்சாரம் இல்லை என்று சொன்னால் வழக்கு, ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் வழக்கு என்கிறார்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு அமைச்சர்கள் மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார். மேலும், கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதே பாரதிய ஜனதாக் கட்சியின் கருத்தாக உள்ளது எனத் தெரிவித்த அவர், இது அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும் எனக் கூறினார்.

யார் பிரதான எதிர்க்கட்சி என்பது முக்கியம் கிடையாது. அதனை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் மத்தியில் உண்மைகளைக் கொண்டு செல்வதால் பாரதிய ஜனதா கட்சியை திமுக வளர்த்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் ஊழல்கள் உடனுக்குடன் வெளி வருவதாகவும், தொழில்நுட்ப உலகில் ஊழலை மறைத்து விடமுடியாது, எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை உறுதி செய்த பின்னரே குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.