முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடு முழுவதும் பாஜக வாரிசு அரசியல் செய்கிறது: திமுக பதிலடி

பாஜக நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்து வருவதாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பேச்சுக்கு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் திரு ஜே.பி. நட்டா, ‘திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது’ என்று குற்றம் சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை சேர்ப்பதை திசை திருப்பி- எங்கே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணியும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து குறை கூறுவது வியப்பளிக்கிறது.

பல வாரிசுகளை உருவாக்கி- அவர்களை சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி- நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பா.ஜ.க., மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி ‘வாரிசு அரசியல்’ என்று கூறுவது வெட்கக் கேடானது. பாவம்- அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய் பிரச்சாரம் செய்தாலும்- தமிழ்நாடு மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்.

ஜெ.பி.நட்டா

பத்தாண்டு காலம் அரசு நிர்வாகத்தை பாழ்படுத்தி- ஊழல், நிர்வாக சீர்கேடு என தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அதிமுகவை அருகில் வைத்துக் கொண்டு ’நிர்வாகம்’ குறித்து திமுகவிற்கு பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா. திமுக ஆட்சி இருந்த போதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம் தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாடு மக்கள், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும்.

மழை வெள்ள சேதங்களை தினமும் பார்வையிட்டு- மக்களுக்கு நிவாரணம் வழங்கி- பணிகளை முடுக்கி விட்டு முதலமைச்சர் எங்கள் தளபதி மட்டுமே. அப்படியொரு முதலமைச்சர் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்துவிட்டது வேதனையளிக்கிறது. ஆகவே நல்லாட்சி வழங்கி- தமிழ்நாட்டு மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று பணியாற்றும் முதலமைச்சரைக் கொண்ட திமுக ஆட்சியைப் பார்த்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது- தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா- அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கம் தொட்டே தி.மு.க.வின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்த உடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்து விட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அவர்கள் அரசியல் விழாக்களுக்கு வரும் போது “பொய் மூட்டைகளை” அவிழ்த்துக் கொட்டுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்

Halley karthi

 வரதட்சனையை திருப்பிக் கொடுத்த மணமகன், குவியும் பாராட்டு

Gayathri Venkatesan

திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

Halley karthi