தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை. அதிமுக ஆட்சியின் போது தடையின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்து, 51வது ஆண்டு துவங்கியுள்ளது. இதனை, முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர். காமராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின் விழாவில் பேசிய ஆர். காமராஜ், ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றது. அப்போது நெல் கொள்முதல் செய்யப்படுவதில் பிரச்னை ஏற்பட்டது கிடையாது. தற்போது திமுக ஆட்சியில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என எழுதப்படாத உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.
நெல் கொள்முதலை அரசால் சமாளிக்க முடியவில்லை. சாலைகளில் நெல் கொட்டி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 22 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை பிடித்து நேராக ஆலைக்கு அனுப்பிவிடலாம் ஆனால் திமுக அரசுக்கு தெம்பில்லை.
சட்டமன்றத்தில் எம் எல் ஏ ஒருவர் இலவசம் எனப் பேசியபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இலவசம் எனக் கூறாதீர்கள், விலையில்லாது என கூறவேண்டும் என கூறினார்கள். ஆனால் திமுக அரசை சேர்ந்த அமைச்சர் பொன்முடி ஓசி எனக் கூறுகிறார்.
பொது மக்களை அசிங்கப்டுத்தும் ஆட்சியாக திமுக உள்ளது. அதிமுக மீண்டும் எப்போது வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் தற்போது எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதிமுக அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன எனவும் பேசினார்.







