திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியைத் தழுவியது. 9 தொகுதிகளில் அதிமுகவும், கோவை தெற்கு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வெற்றிபெற்றன. இதனால் கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் (பொள்ளாச்சி), கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வரதராஜனுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.மருத்துவரான வரதராஜன் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







