கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் தண்டோரா வாசிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் துறையூரில் நிகழ்ந்துள்ளது.
ஊரடங்கால் 2 ஆண்டுகளாகவே பள்ளிச் செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவ, கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்பி வருகிறது தமிழக அரசு. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்த நிலையில் தான், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள ‘மான்ய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தண்டோரா வாசித்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
280 மாணவர்களுடன் செயல்படும் இப்பள்ளியில், 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வீடுதான் பள்ளி, டிவி அறைதான் வகுப்பறை, கல்வி தொலைக்காட்சி தான் ஆசிரியர் என, மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்க முயற்சித்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி தண்டோரா வாசித்தும் துண்டு பிரசுரம் விநியோகித்தும் மக்களை கவர்ந்துள்ளனர்.
மாநில அரசு மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் ஆசிரியர்கள், மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தானே தண்டோரா வாசித்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள். தனியார் பள்ளிகள் முளைத்தாலும், மாணவர்களுக்காக தன்னை அற்பணிக்கும் ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில்தான் இன்னும் பார்க்கமுடிகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.







