மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் தேர்தலில் போட்டியிடுவவ்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன்,
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




