நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை – உயர் நீதிமன்ற மதுரை கிளை 

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  மதுரை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற…

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

மதுரை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற
நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்து செயல்பட்டது.  தங்கள் நிதி
நிறுவனத்தில் முதலீடு செய்தால்,  அதிக வட்டி தருவதாகவும்,  இரட்டிப்பு தொகை
தரப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதை நம்பி பொதுமக்கள் 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்தனர்.  ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர்.  இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர்.  இதனடிப்படையில் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமினின் வெளியே வந்த இவர்கள் தற்போது வழக்கை நீர்த்துப் போகும் விதமாக
தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகரை சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் என்ற இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி புகார் எழும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி, விசாரணை தள்ளிவைத்தது.  இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை திருப்தி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  நிதிநிறுவன மோசடி வழக்குகளை கையாள ஒற்றை சாரள முறையை ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்துள்ளது.  இவ்வாறு செய்வதற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை விரைவாக திரும்ப வழங்குவது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.