கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது பைசல் லட்சத்தீவு மக்களவை எம்.பி.யாக இருந்த நேரத்தில், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு,10 ஆண்டு சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் கடந்த ஜனவரி 13 அன்று உத்தரவிட்டது. உடனடியாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்து தனது தரப்பு வாதங்களை முன் வைத்ததை தொடர்ந்து, சிறை தண்டனைக்கும், தீர்ப்புக்கும் கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 25 அன்று இடைக்கால தடை விதித்தது.
இருப்பினும் தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெறாமல் இருந்த நிலையில், முகமது பைசல் தகுதிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கும் கடிதம் எழுதினார். இந்த நேரத்தில் தான் உச்சநீதிமன்றத்தில்
முகமது பைசல் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், தற்போது அவருடைய மக்களவை எம்.பி பதவி திரும்ப மறுபடியும் அவருக்கே வழங்கப்பட்டு, தகுதிநீக்க உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








