கோயில் திருவிழாவில் தகராறு – 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை……நடனம் ஆடியதால் நேர்ந்த விபரீதம்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து சென்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பேரளாம்மன் கோவில் தெருவில் நடனமாடி கொண்டிருந்த சியாம் சுந்தர் மீது குளித்தலை பெரிய பாலத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சிலர் விழுந்துள்ளனர். இதற்கு ஷியாம் சுந்தர் ஓரமாக சென்று நடனம் ஆடுங்கள் என கூறியதற்கு நாகேந்திரன் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ஷியாம் சுந்தர் உயிரிழந்துள்ளார்.

இதனை தடுக்க வந்த அஜய், வசந்தகுமார் ஆகிய இருவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அஜய் குளித்தலை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் லேசான காயங்களுடன் வசந்தகுமார் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீசார் ஷியாம் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.