சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வேளாண் பொருட்கள் தொடர்பான திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 15-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கிராம சபை கூட்டங்களில் வேளாண்மை-உழவர் நலத்துறையைச் சார்ந்த வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை தொடர்பான பல்வேறு திட்டப் பலன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், பல்வேறு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமசபைக் கூட்ட நிகழ்வினை சகோதரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடும்வகையில், நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளின் பெயர் விவரங்களை ஊராட்சி வாரியாக தயாரித்து, பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வைக்கப்பட உள்ளது.
மேலும், பல்வேறு பயிர்களில் உயர் மகசூல் பெற உதவும் முக்கியமான தொழில்நுட்பங்கள், துறையின் முக்கிய பணிகள் குறித்து, கண்காட்சி நடத்தப்படுவதுடன், பதாகைகள் வைக்கவும், கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு திட்டங்கள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் பயன்படுத்துவது தொடர்பாகவும், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து விவசாயிகளுக்கும் எடுத்துக்கூறப்படும்.
எனவே, விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பயன்களை முழுமையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என வேளாண்மை-உழவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








