பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று (அக்டோபர் 3) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.,
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், இந்திய சினிமாவில் புதுமையான, சோதனை முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவர். கே.வி.ரெட்டியின் ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பிற்காலத்தில் இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.
‘அபூர்வ சகோதரர்கள்’ (1989) படத்தில் ‘அப்பு’ என்ற பாத்திரத்தில் கமலை வித்தியாசமாக படம்பிடித்துத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தினார். தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் கர்நாடக மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ள இவருக்கு, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது. 90 வயதைக் கடந்த நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாத சிங்கீதம் சீனிவாச ராவ் சமீபத்தில் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பான் இந்தியா படைப்பாக வெளியானது. சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




