முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’இந்தியன் 2’ பிரச்னை: சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி !

’இந்தியன் 2’ படப் பிரச்னை தொடர்பாக, லைகா நிறுவனத்துடன் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கு ஹீரோ ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க, ஷங்கர் தயாராகி வருகிறார். இதை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் ஷங்கர் இயக்க இருக்கிறார்.

இதற்கிடையே, ’இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து விடுவார் எனவும் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியதாகவும், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய ஷங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக தெரிவித்திருந்தோம். ஜூன் மாதத்திலேயே படத்தை முடிக்க லைகா வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை, ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement:

Related posts

பனியிலும் பணி செய்யும் ரயில்வே துறை; இணையத்தை கலக்கும் வீடியோ!

Jayapriya

மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மமதா ஆறுதல்

Saravana Kumar

தமிழக கொரோனா நிலவரம் : கடந்த ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு!

Jeba