திருக்கடையூர் கோயிலில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆயுஷ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்தார். நடிகர் விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆயுஷ் ஹோமம் வளர்த்து காலசம்கார மூர்த்தியை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதிகம்.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 70 மற்றும் 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து மணிவிழா, சதாபிஷேக விழா மேற்கொள்வது வழக்கம்.
இதனிடையே, திரைப்பட இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி, சுவாமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மேலும் தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக, கடந்த 2ம் தேதி தனது பிறந்த நாளை மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மகனும் நடிகருமான விஜய் பங்கேற்கவில்லை.
1978ம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். நாளைய தீர்ப்பு, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.








