நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட இரவின் நிழல், இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் கடந்த 30 வருடத்திற்கும் மேலாக நடிகர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களில் தனது திறமையைப் பதிவு செய்தவர் பார்த்திபன். எப்போதும் புதுமையான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பார்த்திபன் தான் இயக்கும் படங்களிலும் அதை முழுமூச்சாகச் செயல்படுத்தி வருகிறர்.
குறிப்பாக இவர் தயாரித்து, நடித்து, இயக்கிய படமான “ஒத்த செருப்பு அளவு 7” என்ற படம் அவரின் புதிய முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்ததோடு அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதன் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ என்ற படமும் அவர் புதிய முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்தது. நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட இப்படம் பலரின் பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் படங்களின் சார்பில் குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த அறிவிப்பை இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா நேற்று அறிவித்திருந்தார்.
பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, டிபன் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ், ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ட்ரிபேக்கா திரைத் திருவிழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இந்தியத் தரப்பில் காஷ்மீர் ஃபைல்ஸ் அல்லது ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் ஆஸ்கர் 2023 தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் செலோ ஷோ திரைப்படம் தேர்வாகி இருப்பதால் இப்படம் குறித்த பேச்சே தற்போது இணையத்தில் வலம் வந்த வண்ணமாக உள்ளது.
அந்த வகையில் இப்படத்தைப் பற்றி பார்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “ மகிழ்ச்சி! எந்த கூடுதல் சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்பத் தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று.
‘செலோ ஷோ’ குஜராத்தி படம். (சினிமா பாரடைசோ பாதிப்பில்) பிலிம் டு டிஜிட்டல் என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று!
அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து, கடைசியில் ‘தி லைட் ஆப் ஹோப்’ அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குநர் திரு‘பான் நாலின்’ அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.







