கோவை மாவட்டம், இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை, தடாகம் சாலையில் சிவாஜி காலனி – கேஎன்ஜி புதூர் வரையிலான பகுதிகளில் தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தடாகம் சாலை தோண்டப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த குழிகள் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதையறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக குழிக்குள் சிக்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை பலத்த சேதமடைந்து காணப்படும் நிலையில் தற்போது குடிநீர் குழாய் பணிகளும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து குழிக்குள் சிக்கிய நிலையில், வாகன போக்குவரத்தை அப்பகுதி மக்களே சீரமைத்து வருகின்றனர்.
இதுவரை காவல் துறையினரோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ சம்பவ இடத்தை பார்வையிடவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-ம.பவித்ரா








