இனி வரும் காலங்களில் வரலாற்றுப் படம் எடுக்க வாய்ப்புள்ளது – இயக்குநர் மணிரத்னம்

இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வனைப் போன்ற வரலாற்றுப் படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய்,…

இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வனைப் போன்ற வரலாற்றுப் படங்கள் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : அரசியலுக்கு வரும் எண்ணம் கூட இல்லை! – மனம் திறந்த குந்தவை

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, இயக்குநர் மணிரத்னம் ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், “பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வன் படத்தை போன்று வரலாற்று படங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது. நரிக்குறவர் சமூகத்தினரை திரையரங்கில் அனுமதிக்க மறுத்தது, உங்களைப்போல எனக்கும் மிக வருத்தம் தான். அதை நாம்தான் மாற்ற வேண்டும்.

எல்லாருக்கும் கருத்து இருக்கும். அதை எதற்கு சொல்கிறார்கள் என்று தெரியும். இந்த படத்தை மிகைப்படுத்தி எடுக்கக் கூடாது. போலி தன்மையாக இருக்க கூடாது என்று நினைத்துதான் எடுத்தோம். அதனால் அதை பற்றி கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை” என்று தெரிவித்தார்.

ராஜா ராஜா சோழன் இந்து என்று பேசப்பட்டது, தமிழ் மன்னனை இந்து என காட்டியதாக சொல்லப்பட்டது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், “தேவையில்லாத சர்ச்சைகள் தேவையில்லை. கல்கி எழுதியதை வைத்து படம் எடுத்தோம். கல்கி என்ன எழுதினாரோ அதை வைத்து தான் படம் எடுத்துள்ளேன். அவர் சொன்ன கதாபாத்திரங்கள் தான் இதில் இருக்கும். இரண்டாம் பாகத்திலும் அது தான் இருக்கும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.