விஜய் சேதுபதியுடன் இனி இணையப்போவது இல்லை! – இயக்குநர் சீனு ராமசாமி

விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட…

விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச
திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய்
சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதனை
முன்னிட்டு பாராட்டு விழா நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன்
மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன், நடிகர் ராஜேஷ், பூச்சி முருகன், இந்தோ ரஷ்யா மையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “நடிகர் ராஜேஷ் என்னுடைய வழிகாட்டி.
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் எப்படி ரஷ்யாவுக்கு சென்றதோ, அதேபோல் மாமனிதன் திரைப்படம் ரஷ்யாவுக்கு செல்கிறது. மாக்ஸின் கார்கியின் ’தாய்’ நாவல் தான் தென்மேற்கு பருவக்காற்று படம். பாவலை நினைத்து தாய் கஷ்டப்படுவது போல தான் ருஷிய இலக்கியங்களால் உந்தப்பட்டு படங்களை உருவாக்குகிறேன்.

இதையும் படியுங்கள் : இனி வரும் காலங்களில் வரலாற்றுப் படம் எடுக்க வாய்ப்புள்ளது – இயக்குநர் மணிரத்னம்

நான் சினிமாவுக்கு வந்த நோக்கங்கள் தற்போது நிறைவேறி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்த ரஷ்ய நாட்டிற்கு, மாமனிதன் படம் செல்ல இருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. நான் ரஷ்யாவுக்கு போகவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைதான் போகிறது. என் ஊரில் மேய்ந்த கோழியும், மனிதநேயமும், கலாச்சாரமும் தான் போகிறது.

மேடைகளில் இன்றெல்லாம் மிகவும் கவனமாக பேச வேண்டி இருக்கிறது. சமூக வலைதளங்களே பெரிய கவலையாக இருக்கிறது. மனதில் இருப்பதெல்லாம் பேச முடியவில்லை. யாரையும் பாராட்ட முடியவில்லை.

திரையரங்கில் 20 சதவீத ரசிகர்களோடு மாமனிதன் திரைப்படம் ஓடி முடித்தது. நீங்கள் தான் எட்டு படம் எடுத்து விட்டீர்களே ஒரு படம் தான டிவியில் அனைத்து மக்களும் பார்ப்பார்கள் என்றார்கள். 8 பிள்ளை பெற்றாலும், உயிரோடு இருக்கும் ஒரு பிள்ளையை பார்க்க வேண்டாமா. ஆனால் இந்த ஒரு பிள்ளை தற்போது உலக ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். உலக அரங்கில் மாமனிதன் திரைப்படம் தற்போது வரை 650 முறை திரையிடப்பட்டுள்ளது. ஆஹா OTT மூலம் மாமனிதன் திரைப்படம் 51 கோடி வசூல் செய்துள்ளது. பொது ஊடகத்தால் வெற்றி பெற முடியாத படம் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது. விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது. 12 ஆண்டு காலத்தில் நான்கு படங்களை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.