தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு இயக்குனர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் எண்ணற்ற சிறந்த படைப்புகளை இயக்கியவர் பாரதிராஜா. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் பாரதிராஜாவின் நடிப்பு அதிகளவில் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவின் காரணமாகச் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல் நிலையைச் சோதித்துப் பார்த்ததில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப உள்ளார் எனவும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.







