இலங்கை பிரதமரானார் தினேஷ் குணவர்தன

இலங்கை பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக…

இலங்கை பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனவை, பிரதமராக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். கோத்தபய ராஜபக்ச அதிபராக இருந்தபோது, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவரான தினேஷ் குணவர்த்தன இன்று காலை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற எளிய விழாவில், அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், தினேஷ் குணவர்தன இலங்கையின் 15வது பிரதமராகி உள்ளார்.

இலங்கையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசு அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், நாடாளுமன்றம் வரும் 27ம் தேதிதான் கூட உள்ளது. அதன் பிறகே தேசிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என்பதால், இடைக்கால ஏற்பாடாக ஏற்கனவே உள்ள அமைச்சர்களே இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை அகற்ற அதிபர் ரணில் உத்தரவிட்டதை அடுத்து, அந்த கூடாராம் பாதுகாப்புப் படையினரால் இன்று அதிகாலை அகற்றப்பட்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அராஜகத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அளிவித்துள்ளனர்.

இதனிடையே, அதிபர் மாளிகை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.