“ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்” – மாணிக்கம் தாகூர் பேட்டி!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை இந்தியா கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று இந்தியா கூட்டணி எம்பிகள் ஆலோசனை நடத்தினோம்.

இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.கள் வந்த போது இடையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இவ்வாறு தடுத்து நிறுத்தியது கண்டனத்துக்குரியது, ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க தேர்தல் ஆணையர் மறுத்துவிட்டார். தற்போது ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை இந்தியா கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.

எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டும் என்று உண்மையாக நினைத்து இருந்தால் தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்திருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையமானது, ஆணையர் ஞானேஷ் குமாரின் கையில் ஒரு திருட்டு தேர்தல் ஆணையமாக செயல்பட்டு வருகிறது, அத்தகைய திருட்டு தேர்தல் ஆணையத்தை எதிர்த்து எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.