திண்டுக்கல் : மாணவியர் விடுதியில் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மாணவிகள் விடுதியில் நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மாணவிகள் விடுதியில் நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இந்த விடுதியில், அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் தங்கி படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், விடுதியில் சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்களை நிகழ்த்தி உள்ளனர். மாணவிகள் விடுதியில் இருந்து வெளியே போக முடியாததால், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தொலைபேசியில் தெரிவிக்கலாம் என ஒரு தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, மாணவி ஒருவர் அந்த தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மீண்டும் விடுதிக்கு படையெடுத்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர்.

 

அறச்சீற்றம் : பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விடுதி மாணவிகள்

அப்போது, நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சத்தியாநகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கேட்டபோது, பாதிக்கப்பட்ட மாணவிகளின் நலன் கருதி இந்த விவகாரம் மறைமுகமாக விசாரிக்கப்படும் என  தெரிவித்துள்ளது. மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றும் கூறினர். மேலும் கவனகுறைவாக செயல்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் காவலாளி ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், இதில், சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடையே, விடுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தவேண்டும் என்றும் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.