மொழியை கடந்து ரசிக்கப்படும் ’எஞ்சாயி என் சாமி’ பாடல்: வைரலாகும் பாலிவுட் நடிகரின் வீடியோ

பாலிவுட் நடிகர் மற்றும் பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் ’எஞ்சாயி என் சாமி’ பாடலுக்கு நடமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நிகழ்கால அரசியலை மையப்படுத்திய வரிகளை ராப் பாடலுடன் இணைத்து அதை அனைவரும் ரசிக்கும்…

பாலிவுட் நடிகர் மற்றும் பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் ’எஞ்சாயி என் சாமி’ பாடலுக்கு நடமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நிகழ்கால அரசியலை மையப்படுத்திய வரிகளை ராப் பாடலுடன் இணைத்து அதை அனைவரும் ரசிக்கும் விதமாக மாற்றியவர் அறிவு. ‘ கேஸ்ட் லெஸ் கலெக்டிவ்’ (casteless collective)’ என்ற இசைக்குழுவில் பிரதான பாடகர் அவர். இவர் சமீபத்தில் பாடகி தீ-யுடன் இணைந்து ’எஞ்சாயி என் சாமி’ என்ற ஆல்பம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை சந்தோஷ் நராயணன் இசையமைத்துள்ளார். மாஜா தயாரித்துள்ளார். அமித் கிருஷ்ணன் இந்த பாடலை இயக்கி உள்ளார்.

ஏ சண்டக்காரா, ரவுடி பேபி, கண்ணமா உள்ளிட்ட பாடலை பாடியவர் தீ. மற்றவர்களைப்போல் அல்லாது தீ-யின் காத்திரமான குரல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த பாடலில் தீ, சிறிய நடன அசைவுடன் பாடியிருப்பார், அது மிகவும் நேர்த்தியாக இந்த பாடலுக்கு பொருந்தியிருக்கும். மேலும் இந்த பாடலின் வரிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ’ நல்ல படி வாழச்சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வக்கொடி’, ‘ பாட்டன் பூட்டன் காத்த பூமி. ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி’, ’பந்தலில பாவக்கா, அது வெதகல்லு விட்டிருக்கு’ போன்ற வரிகள் நம் கிராமத்து நிலம், சாமி, மக்கள், வழிபாடு, கொண்டாட்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.

பல ஆல்பம் பாடல்கள் தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒரு ராப் பாடலில், நம் நிலத்தின் வர்ணனைகள் வருவது இதுவே முதல் முறை. இந்த சிறப்பம்சம்தான் இந்த பாடலை சர்வதேச தரத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது. மொழியைக் கடந்து இப்பாடல் ரசிக்கப்படுகிறது. தற்போது பாடகர் மற்று நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கு மேம்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். நடிகர் தில்ஜித் டோசன்ஜ், பஞ்சாப் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சஜ்ஜன் சிங் ரங்ரூத் என்ற பஞ்சாபி திரைப்படத்திலும், குட் நியூஸ் என்ற இந்தி திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பராட்டப்பட்டது.

’எஞ்சாயி என் சாமி’ பாடலை இதுவரை 14 கோடிக்கு அதிகமானோர் யுடியூபில் பார்த்துள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.