நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம்! மின் நுகர்வோருக்கான விதிகளில் மத்திய அரசு திருத்தம்!

நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் நுகர்வோருக்கான விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் நுகர்வோர் உரிமைகள் விதிகளில், பகல் நேர கட்டணத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட்…

நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் நுகர்வோருக்கான விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மின்சாரம் நுகர்வோர் உரிமைகள் விதிகளில், பகல் நேர கட்டணத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பகல் நேர கட்டணம் என்பது, ஒரு நாளின் எல்லா நேரத்திற்கும் ஒரே விகிதத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், தற்போது நாள் முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும்,

அதேசமயம், நீர், நிலக்கரி, காற்று மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் மின் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகல் நேர கட்டணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனே அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டரிங் விதி திருத்தத்தின்படி, அனுமதிக்கப்பட்ட மின் தேவைக்கு மேல், நுகர்வோர் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் மூன்று முறை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மின்சாரத்தை உபயோகித்தால், நுகர்வோரின் மின் தேவை அளவை மாற்றியமைக்கும் வகையிலும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.