”இந்த பின்னடவை எதிர்பார்க்கவில்லை” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.
காலை 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 121-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 72 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ” பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் கடினமாக முயற்சி செய்த போதிலும் தேர்தலில் ஏற்பட்ட இந்த பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. முழுமையான முடிவுகள் வெளியான பின்னர் அதுகுறித்து விரிவாக ஆராய்வோம். இந்த முடிவுகளை ஏற்றுக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் முழு பலத்துடன் எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.







