கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், வெற்றிபெறும் வேட்பாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தமிழ்நாட்டை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தங்களுக்கு வெற்றி உறுதி என காங்கிரஸ் கட்சியும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கர்நாடக அரசியல் வரலாற்றில், ஆட்சி அமைக்கும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், கூண்டோடு மாற்று கட்சிக்கு தாவுவதால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவை தவிர்த்த சில மாநிலங்களில்கூட பெரும்பான்மை கொண்ட கட்சிகள் உடைந்த வரலாறு உண்டு.
இதனால் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிச் சான்றிதழ்களை பெற்ற பின்னர், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க தமிழ்நாட்டை காங்கிரஸ் கட்சித் தலைமை தேர்வு செய்துள்ளது. தனது கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உறுப்பினர்களை தங்க வைக்க திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களை தங்க வைக்கும் சூழ்நிலை வந்தால், தங்க வைப்பதற்காக, வாகனங்கள், விடுதிகள் என இப்போதே அனைத்தையும் தயாராக வைத்திருக்கும்படி காங்கிரஸ் தலைமையிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.