மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று முன்தினம் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி நேற்று 2 நாள் பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார்.
இதனையடுத்து ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தடுத்தி நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2ஆம் நாள் சுற்றுப் பயணமாக ஹெலிகாப்டர் மூலம் மொய்ரங் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு இரண்டு நிவாரண முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிறுமி ஒருவர், கலவரத்தால் தமது குடும்பம் பாதிக்கப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.
இதற்கிடையில், நேற்று மாலை தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே திடீரென ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுக்கும் முயற்சியாக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலதத்தில் வன்முறை நின்ற பாடில்லை. சற்று ஓய்ந்திருப்பதாக நினைத்த வன்முறை போராட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் வெடித்துள்ளன. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையல், மணிப்பூர் மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதற்காக அம்மாநில ஆளுநர் அனுசியாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசிடமிருந்து வந்த அழுத்தத்தின் பேரில் பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகத் கூறப்படுகிறது.
மேலும் அவர் ராஜினாமா கடிதத்தை, ஆளுநரை சந்தித்து கொடுப்பதற்காக வருவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக சாலையில் இறங்கி பிரேன் தனது பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தவிர அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் பைரனிடம் இருந்த ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா










