தர்மபுரி வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

தர்மபுரி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மல்லியம்பட்டி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடித்து விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24.02.2025) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் திருமஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.