பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.. மலைப்பாதையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு..

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் மலையேறும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் மலையேறும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் வரும் 17ம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பிரதோஷ வழிபாட்டிற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

பிரதோஷ வழிபாட்டிற்காக வருகை தந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்பவர் கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை எனும் இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் உடலை கைப்பற்றி சாப்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.