மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைநகர் ராஜ் தாக்கரேவை அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே சமீபத்தில் முதலமைச்சரானார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சரானார்.
இருவருக்கும் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வாழ்த்து தெரிவித்திருந்தார்.
முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னவிஸ், கட்சியின் கட்டளையை ஏற்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக ராஜ் தாக்கரே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள ராஜ் தாக்கரேவின் இல்லத்திற்குச் சென்ற தேவேந்திர பட்னவிஸ், அவருடன் ஆலோசனை நடத்தினார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தற்போதைய அரசில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா இடம் பெற வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேவேந்திர பட்னவிசின் கோரிக்கை ஏற்கப்படுமானால், ராஜ் தாக்கரேவின் மகன் அமித் தாக்கரே அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.










