தமிழ்நாடு ஆளுநர் அழைத்திருக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உதகமண்டலத்தில் துணைவேந்தர் மாநாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார், மத்திய மற்றும் மாநில என அனைத்து பல்கலைக்கழகங்களும் அழைப்புவிடுக்கபட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரு தனியார் கம்பெனியின் சிஇஓ உரையாற்ற உள்ளார். ஆனால் மாநிலத்தின் இணை வேந்தரான உயர்கல்வி துறை அமைச்சர் பங்கேற்பதற்கான அறிவிப்பு எதுவும் அந்த செய்திக்குறிப்பு வெளியாகவில்லை என தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு பல்கலைக்கழகம் மூலமாக நடைமுறைபடுத்த முயல்வதாகவும், இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உகந்த செயல் அல்ல என தெரிவித்த அவர், ஆளுநர் தலைவர் மட்டும் தான். ஆனால் அதிகாரத்தின் மையம் அல்ல என குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஆளுநர் உள்ளதாகவும், நீட் தேர்வு மசோதா குறித்து சட்டசபையில் இரண்டு முறை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் மௌனம் காண்கிறார் எனவும், ஆளுநர் மக்களாட்சி மாண்புகளை சீர்குலைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், முதலமைச்சர் தலைமையில் தான் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். மாநிலத்தின் கொள்கை முடிவு மாநில அமைச்சரவையில் தான் உருவாகும். ஆளுநர் தன் சொந்த விருப்பத்தை மாநில மக்கள் மீது திணிக்க முடியாது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவது மாநில அரசின் பணி. கல்விக்கொள்கையை ஏற்க வேண்டுமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில பல்கலைக் கழகங்களுக்கு இணைவேந்தராக பொறுப்பு வகிக்கும் மாநில உயர்கல்வி அமைச்சர் பங்கேற்பு இல்லாமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்வதன் மூலம் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகரான அதிகார மையமாக ஆளுநர் மாளிகை செயல்படுவதில், இரட்டை ஆட்சி முறையை நிறைவேற்ற ஆளுநர் பார்க்கிறாரா? என்று கேள்வியெழுப்பினார்.
மாநில அரசின் பல்கலைக்கழகங்களை மாநில அரசுக்கே தெரியாமல் ஆளுநர் மாநாட்டிற்கு அழைக்கிறார் என்றால் இவர் எத்தகைய செயலை செய்கிறார் என்பது பார்த்து தமிழக அரசு மாநாட்டை புறக்கணிக்க அறிவுறுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைப்பதாக கூறினார். துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் தாமாக வந்து இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.








