விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கு தணிக்கை வழங்ககோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
இதனிடையே தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனிடையே ஜனநாயகன் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையினால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுத்தனமாகத் திரைப்படம் பார்ப்பதைத் (Piracy) தவிர்க்கவும்.
தயவுசெய்து திரையரங்கு வெளியீட்டிற்காகக் காத்திருந்து, தியேட்டர்களில் படத்தைப் பாருங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமைகளை மதிக்கவும்…கடின உழைப்பை மதிக்கவும்…திரையுலகை மதிக்கவும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







