சென்னையில் டெலிவரி ஊழியரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி நடுகுப்பம் 3வது தெருவை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பணியை முடித்து விட்டு தனது நண்பர்களுடன் அவர் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த அஜித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டுள்ள அஜித் மீது ஜாம்பஜார், ராயப்பேட்டை,மெரினா உட்பட பல காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு பிரச்சனையா என்பது குறித்து சரிவர தெரியவில்லை.







