டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்த நிலையில், மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய பரபரப்பு வீடியோ வைரல் ஆகியுள்ளது.
வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கி வரும் பயிற்சி மையம் ஒன்றில் திடீரென மதியம் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேகமாக கரும்புகை சூழவே அங்கிருந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்திருக்கின்றனர். இந்நிலையில் தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன. இதற்குள் கரும்புகையால் மூச்சு திணறலுக்கு ஆளான மாணவ, மாணவியர் ஜன்னல் வழியாக வெளியேற முயற்சித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கொடுத்த கயிறுகளின் உதவியுடன் ஒவ்வொரு மாணவராக வெளியேற ஆரம்பித்தனர். ஜன்னல் வழியாக வெளியேறிய அவர்கள் கட்டடத்தின் பக்கவாட்டில் இருந்த ஏசி இயந்திரங்களின் மீது குதித்தும், கயிற்களை பிடித்தவாறும் தப்பினர். மாணவியரும் ஜன்னல் வழியாக குதித்து கயிற்றின் உதவியோடு பத்திரமாக வெளியேறினர். விபத்து நடந்த உடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்ததால் எவருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றும், தப்பிக்கும் முயற்சியில் 4 மாணவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன் மாணவர்கள் அனைவரும் தப்பியுள்ளனர். அவர்கள் சாகச வீரர்களை போல் கயிறுகளை பிடித்து தப்பிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.







