ஜி20 மாநாட்டுக்காக வீடற்றவர்களின் வாழ்விடத்தை தகர்த்த டெல்லி போலீசார்!

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பல ஆதரவற்ற, வீடற்றவர்களின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின்…

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பல ஆதரவற்ற, வீடற்றவர்களின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் ஜி20 மாநாட்டிற்காக, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் வசிக்கும் வீடற்றவர்களை, அவர்களின் இருப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தும் அவலம் அரங்கேறி வருகிறது. ’அழகுபடுத்தும் இயக்கம்’ என்று அழைக்கப்படும் இந்த அப்புறப்படுத்தும் பணிகளால், பல வீடற்றவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

“போலீசார் எங்களை அடித்தனர். அவர்கள் எங்களை, முன்பின் அறிமுகம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் வாழ்ந்து வந்த இடத்தை, புல்டோசர் போன்ற கனரக வாகனங்கள் மூலம் தகர்த்தனர். எங்களை வெளியேறச் சொல்லி, அடித்து துன்புறுத்தினர். போலீசார் எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். இங்கேயே தங்கி, கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்த பல பேர், இன்று இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர்” என்று வீடற்றவர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் பலரின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. வீடற்றவர்களின் இருப்பிடத்தை அப்புறப்படுத்துவது குறித்த எந்த முன்னறிவிப்பும் அதிகாரிகள் கொடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லி அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.