டெல்லி விவசாயிகள் போராட்டம்: வாபஸ் பெற்றது ஒரு பிரிவு!

விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி…

விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற 11 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். எல்லையில் இருந்து டெல்லிக்குள் நுழைய முயன்ற போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

தடையை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள், அங்கிருந்த கோபுரத்தின் மீது கொடியை ஏற்றினர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இதுதொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போராட்டத்தை குலைக்க விஷமிகள் ஊடுருவிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில் போராட்டத்தில் வன்முறை மூண்டது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க விவசாய சங்கங்கள் இன்று அவரசமாக கூடியது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சிங், வேறு யாரோ சிலரின் வழிநடத்துதலோடு போராட்டம் திசை திரும்புவதால் அதில் தொடர முடியாது என்றார். தாங்கள் அடி வாங்கி துன்புறுவதற்காக போராட்டத்திற்கு வரவில்லை என்றதோடு, உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டார்.

என்றாலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்தார். மேலும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு போராட்டத்தை வாபஸ் பெறவில்லை என்ற வி.எம்.சிங், ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் அமைப்பு மட்டுமே போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும் விளக்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply