கும்பகோணம் அருகிலுள்ள கல்லூரி கிராமத்தில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையிலும், காதலி விஷம் குடித்த நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகிலுள்ள கல்லூர் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகிலேயே பெண் சடலம் விஷம் அருந்தி இறந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. அருகிலேயே மோட்டார் சைக்கிளும், சில பைகளும் இருந்துள்ளன. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரை மாய்த்துக் கொண்ட பெண் கபிஸ்தலம் அருகிலுள்ள பொன்பேத்தி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்றும், தூக்கில் தொங்கிய இளைஞர் கும்பகோணம் திருப்புறம்பியத்தை சேர்ந்த அழகர் என்பதும் தெரிய வந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரிழப்பு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.







