நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் ஜெக்ரிவால், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக சென்றுகொண்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்தார். இந்தோனேசியா ஒரு முஸ்லீம் நாடு என்றும் அங்கு 85 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களும், 2 விழுக்காட்டினர் இந்துக்களும் வசிப்பதாகக் கூறினார். அப்படியிருந்தும் அவர்கள் தங்கள் ரூபாய் நோட்டில் விநாயகர் படத்தை அச்சிட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், இந்திய ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தி படத்துடன், மற்றொரு பக்கத்தில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அப்படி அச்சிடும் போது அவர்களின் அருளாசி நாட்டிற்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதோடு, கடவுளின் அருளும் நமக்கு தேவை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, லட்சுமி மற்றும் விநாயகரின் அருள் இருந்தால், நமது நாடு முதலிடத்தைப் பிடிக்கும் என்று கூறினார். ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் அன்னை லட்சுமி தேவி மற்றும் விநாயகர் படங்களை அச்சிட்டால் தேசத்திற்கே நலன் விளையும் என்றும் மணீஷ் சிசோடியா கூறினார்.