இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளையாட்டு தினம்

இன்றைய தலைமுறையில் விளையாட்டு தொடர்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது, நாளை இந்தியாவின் எதிர்காலம் என்பது எழுதப்படாத வரலாறு என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ஆகஸ்ட் 29, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்…

இன்றைய தலைமுறையில் விளையாட்டு தொடர்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது, நாளை இந்தியாவின் எதிர்காலம் என்பது எழுதப்படாத வரலாறு என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

ஆகஸ்ட் 29, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளையாட்டு தினம். பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவது என்பது, ஒரு நாட்டின் உச்சபட்ச கட்டமைப்பைக் கொண்டு மட்டுமே அல்ல, ஆரோக்கியமான எதிர்காலத்தைப் பொருத்தும் அமைகிறது.  அதற்கு மிக முக்கிய காரணமே விளையாட்டு தான். அந்த வகையில் இந்தியா வளர்ச்சி பாதைக்கான வழியில் விளையாட்டையும் இணைத்துக் கொண்டு, பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தயான் சந்த் யார் என எண்ணுபவர்களுக்கு அவர் பெற்றுக்கொடுத்த மூன்று ஒலிம்பிக் தொடர் தங்கப் பதக்கங்கள் சிறந்த சான்றாக விளங்குகிறது. 1928, 1932 மற்றும் 1936 எனத் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தைச் சமர்ப்பித்து, அந்த காலத்தில் ஹாக்கி என்றாலே இந்தியாவை வெல்ல முடியாது என மேலை நாடுகள் அஞ்சும் அளவிற்கு வரலாற்றை உருவாக்கிய சரித்திர நாயகன்.1928 முதல் 1964 வரை எட்டு முறை ஒலிம்பிக் தொடர் அரங்கேறியுள்ளதில், ஏழு முறை இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு முதல் தயான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், உலகிலேயே ஒரு வீரரின் பிறந்தநாளைத் தேசிய தினமாகக் கொண்டாடுவது இந்தியா மட்டும் தான். இந்திய விளையாட்டு உலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் பெயரில் ஒன்றிய அரசின் சார்பாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டும் வருகிறது. அதே சமயம் இந்திய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் பங்களிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கி, காமன்வெல்த், உலக தடகள சாம்பியன்ஷிப், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் என அனைத்திலும் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு இந்தியாவில் விளையாட்டின் மீதான வெளிச்சம் என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியா மீதான பார்வை முதல் தரத்தில் அமைந்ததற்கு, தமிழ்நாடு நட்சத்திரங்களான மாரியப்பன் தங்கவேலு, பவானி தேவி போன்றவர்களின் பங்களிப்பும் அதிகம் என்பது தவிர்க்க முடியாது.மாரியப்பன் தங்கவேலு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ஒரு விளையாட்டு வீரர் என்பவர், நமக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு சாதிக்க வேண்டுமே தவிர, கிடைக்காததை வைத்துக் கொண்டு சாதிக்கும் முயற்சியை விட்டு விட கூடாது என பேசியிருந்தது அவரது முயற்சியின் பலனுக்கான புரிதல் நமக்குத் தெரிகிறது.

பொதுவாகவே இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் மீதான நாட்டம் ஒருபுறம் அதிகமாக இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் குத்துச்சண்டை, தடகள போட்டிகள், பேட்மின்டன், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளின் உச்சபட்ச மதிப்பீடு, ஒவ்வொருவரின் பதக்கங்களிலும் எழுதியுள்ளது. நான் என ஒருமித்துச் செயல்படாமல், நாம் என செயல்பட்டு இந்திய வீரர்கள் தாமஸ் கோப்பை வென்றனர், காமன் வெல்த் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றனர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாமிடம், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் என மாஸ் காட்டி இருப்பதுடன், இந்தியாவின் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தினத்தை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியைத் தேசிய ஈட்டி எறிதல் தினமாக அறிவித்தது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி, காமன்வெல்த் பேட்மின்டன் தொடரில் தங்கம் வென்ற PV சிந்து, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் சரீன் போன்ற பெண்கள், வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்குவதை நினைவு கூறுகிறது இன்றைய தேசிய விளையாட்டு தினம்.இன்று கொண்டாடப்படும் விளையாட்டு தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போன்ற பலரும், பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். இன்றைய தலைமுறையில் விளையாட்டு தொடர்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது, நாளை இந்தியாவின் எதிர்காலம் என்பது எழுதப்படாத வரலாறு.

நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காகச் செய்தியாளர் நாகராஜன், சென்னை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.