சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட வேண்டிய விமானம் குறித்த நேரத்தில் புறப்படாததால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் அனைவரும் சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
ஆனால் 5 நிமிடங்களுக்கு முன் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் அல்லது இன்று ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இந்த விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து மாற்று விமானத்தில் வெளி நாடுகளுக்கு செல்ல இருந்த பயணிகளும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.





