பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கின் 2 நாள் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை செல்வார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறப்பட்டது.
மேலும், இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Due to unavoidable circumstances the visit of Hon'ble RM to Sri Lanka stands deferred to a later date. Shri @rajnathsingh remains committed to strong bilateral cooperation between India & Sri Lanka. RM looks forward to visiting the island nation at earliest possible time frame.
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) September 1, 2023
இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலுவான இருதரப்பு ஒத்துழைப்புக்கு ராஜ்நாத் சிங் உறுதியாக இருக்கிறார் என்றும் விரைவில் இலங்கைக்கு செல்வதை அவர் எதிர்நோக்கி உள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







