களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து கடமான் அட்டகாசம் செய்ததில்
40க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தலையணை
மலையடிவாரத்தில் சிவபுரம் கிராமம் உள்ளது. மலைக் கிராமமான இந்த ஊரை சுற்றிலும்
ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில், விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். சமீபகாலமாக இப்பகுதியில் கடமான், கரடி, காட்டு பன்றி, குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவில் தலையணை மலையடிவாரத்தில் இருந்து வெளிவந்த கடமான்கள் கூட்டம் மேலசிவபுரம் விளைநிலங்களுக்குள் புகுந்தன. இதைப் பார்த்த விவசாயிகள் அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கடமான்கள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 40 வாழைகளை சாய்த்து, வாழைக்காய்களை தின்று சேதப்படுத்தின.
இதையும் படிக்க: லியோ படத்தின் புதிய அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்
நாசமான வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தவைகள் ஆகும். இந்த வாழைகள் சிவபுரத்தை சேர்ந்த விவசாயி பால்துரைக்கு (39) சொந்தமானது ஆகும். இதுபற்றி அவர் கூறுகையில், ‘வாழைகள் பயிர் செய்து 6 மாதமாகி குலை தள்ளி அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில்
கடமான்கள் தின்று அழித்துள்ளன. ஒரு வாழைக்கு உரமிடுவது, கம்பு கொடுப்பது என்று
ரூ. 250 வரை செலவு செய்தும், வனவிலங்குகளின் அட்டகாசத்தால் செலவு செய்த தொகை
கூட கிடைப்பதில்லை” என்றார்.
வனவிலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, விளைநிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா







