டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், டெல்லி போலீசார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி போலீசின் தடயவியல் பிரிவினர், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாகவே, குண்டு வெடிப்பில் சேதம் குறைவாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும் என்று தடயவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து பாதி எரிந்த நிலையில் கிடந்த பிங்க் நிற ஸ்கார்ப் போன்ற துணி, பாலிதீன் பை, இஸ்ரேல் தூதரின் முகவரி இடப்பட்ட கடித உறை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இவற்றில் பதிந்துள்ள கைரேகளை சேகரித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தூதரகம் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.







