அதிமுக பொதுக்குழு வழக்கிலிருந்து தம்மை மாற்றக்கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் செயல் கீழ்த்தரமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு தரப்பினரும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவும், ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழு நடைபெறவிருந்தபோது, அதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க
வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ல் பிறப்பித்த
உத்தரவில், ஓபிஎஸ் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற
வேண்டும் எனவும், ஓபிஎஸ் மற்றும் அம்மன் வைரமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி அம்மன் வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது,
வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க
வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, ஏன் என கேள்வி எழுப்பினார். ஜூலை 11ஆம்
தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ். தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,
நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும்
கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்லல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் (ஓ.பி.எஸ்.) குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை
நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும்
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்தார். அதன்பின்னர், நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பான நடைமுறையை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் ஓ.பி.எஸ். தரப்பிடம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற ஓ.பி.எஸ். தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் அம்மன் வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார்.
நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை அவரே வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளதாகவும், தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ள ஓபிஎஸ் தரப்பு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று பிற்பகலிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளதால், வழக்கை உடனடியாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தது.
அப்போது அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்கில், நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோரின் கடிதங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.









