குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில கல்வி மன்ற வளாகத்தில் குடியரசு தின விழாவில் பங்குபெற உள்ள அலங்கார ஊர்திகள் மற்றும் சிலைகள் வடிவமைப்பு பணிகள் இரவும் பகலுமாய் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது. அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெறுகிறது.
2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன.
3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெறுகிறது,
4-வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம் பெறுகின்றன.
இதுதவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன. போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிடத்தில் விழாவை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Advertisement: