உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் பேஸ்புக் நேரலையில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பட் நகரத்தைச் சேர்ந்தவர் தோமர்(40). இவர் ஷூ கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டதால் அதிகப்படியான கடன் சுமைக்கு ஆளானார். இந்நிலையில் இவர் பேஸ்புக்கில் லைவ் வீடியோ எடுத்தபடி தனது மனைவியுடன் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இந்த முயற்சியின் போது தோமரின் மனைவி விஷத்தை தட்டிவிட முயன்றுள்ளார். ஆனாலும் இருவரும் ஒருகட்டத்தில் கண்ணீர் சிந்தியபடி விஷத்தை உட்கொண்டனர். பேஸ்புக்கில் நேரலையில் இவர் விஷமருந்திய 2 நிமிட வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டுவருவதுடன், பல்வேறு அரசியல்வாதிகளாலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
விஷமருந்தும் சமயத்தில் அவர் பேசியதாவது, “நான் பேசுவதற்கு முழு சுதந்திரமும் இருக்கிறது. எனக்கு கடன்கள் இருந்தாலும் அதை நான் நிச்சயம் திருப்பி செலுத்திவிடுவேன். நான் ஒன்றும் இந்த தேசத்திற்கு எதிரானவன் கிடையாது. இந்த தேசத்தின் மேல் எனக்கும் பற்றுள்ளது. பிரதமர் மோடியிடம் நான் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆம் நீங்கள் விவசாயிகளுக்கும், சிறு குறு தொழிலாளர்களுக்கும் நலம் விரும்பியாக இருக்கவில்லை. தயவு செய்து உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள். தயவு செய்து இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
விஷமருந்திய இவர்கள் இருவருள் மனைவி பூனம் தோமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இத்தகவலறிந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,“தோமர் தம்பதியின் இத்தகைய முயற்சி வருத்தமளிக்கிறது. அவரின் மனைவி பூனம் தோமர் இறந்துள்ளது வேதனையளிக்கிறது. என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நேரலையில் தம்பதியின் இந்த உயிரிழப்பு முயற்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.








