#RatanTata மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம்…

Death of #RatanTata: President, Prime Minister, Chief Minister, Deputy Chief Minister condole!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார். கடந்த அக். 6-ம் தேதி ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (அக். 9) அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடா உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது.

அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“ரத்தன் டாடாவுடனான எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிரம்பியுள்ளது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு பிரச்னைகள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அவரது கண்ணோட்டங்கள் எனக்கு மிகவும் செழுமையாக இருந்தன.

நான் டெல்லிக்கு வந்த பிறகும் இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.